குமரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும் - மகளிர் ஆணைய தலைவி அறிவுறுத்தல்
- சமூகநலத்துறை அதிகாரி சரோஜா மற்றும் அரசு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- குமரி மாவட்டத்தில் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தையல் போன்ற பயிற்சிகளில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்
நாகர்கோவில் :
தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி குமரி மாவட்டம் வந்தார். பின்னர் இங்குள்ள மகளிர் விடுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, ஆர்.டி.ஒ. சேது ராமலிங்கம், சமூகநலத்துறை அதிகாரி சரோஜா மற்றும் அரசு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் மேற்கொள் ளப்பப்பட்டு வரும் பெண் களுக்கு எதிரான பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 4 மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மகளிருக்கு எதிரான குற்றங்களை பெண் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பெண்களுக்கு எதிரான புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்" என்றார்.
சமூகநலத்துறை அதிகாரி சரோஜா கூறுகையில், "குமரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 8 குழந்தைத் திருமணம் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. அதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
மகளிர் ஆணைய தலைவர் குமாரி கூறியதாவது:-
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பெண்கள் முன்னேற்றத்திற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை செயல்படுத்தி பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது குமரி மாவட்டத்தில் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தையல் போன்ற பயிற்சிகளில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நாம் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.