சித்திரங்கோடு பகுதியில் கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- 10 சக்கரம் கொண்ட லாரிகளில் தான் கனிம வளங்கள் ஏற்றி செல்ல வேண்டும்
- காயல்கரை பகுதியில் ரோடு விரிசல் ஏற்பட்டு பக்க சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியை சுற்றி சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இருந்து தினமும் கேரளாவுக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் எம்- சான்ட், என்- சான்ட், கல் ஆகியயை ஏற்றி செல்லப்படுகிறது.
10 சக்கரம் கொண்ட லாரிகளில் தான் கனிம வளங்கள் ஏற்றி செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தி இருந்தது. ஆனால் கனிமவள லாரிகளின் உரிமையாளர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. 12, 14, 16, 18 சக்கரம் என பெரிய டாரஸ் லாரிகளில் இரவு பகலாக கல்களை உடைத்து கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் ரோடுகள் பெரும் சேதம் அடைந்து பல விபத்துக்கள் ஏற்பட்டது.
இதை கட்டுப்படுத்தும் விதமாக வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட சித்திரங்கோடு சந்திப்பில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஒரு எடைமேடை அமைக்கப்பட்டு அனைத்து லாரிகளுக்கும் எடை போட்டு ரூ. 50 வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது.
லாரிகள் அனைத்தும் எடை போட்டு சரியான எடைக்கு மேல் இருந்தால் அபராதம் விதித்து அனுப்பி வைத்து இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் அதிக எடை கொண்ட லாரிகள் இரவு பகலாக செல்கிறது. அந்த லாரிகளுக்கு அபராதம் விதிப்பதில்லை மறைமுகமாக பணம் பெற்றுக்கொண்டு லாரிகளை அனுப்பி வைக்கின்றனர். அதி காலையில் அதிக வாகனங்கள் அந்த பகுதியில் வரிசையாக வந்து நிற்பதால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பல புகார்கள் அனுப்பியும், மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிக எடை கொண்ட லாரிகள் மீது அரசு, போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் 12 சக்கர வாகனங்கள் முதல் 16 சக்கர வாகனங்கள் இந்த பகுதி வழியாக செல்வதால் காயல்கரை பகுதியில் ரோடு விரிசல் ஏற்பட்டு பக்க சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இந்த ரோடு உடைந்தால் சுமார் 200-க்கு மேல் பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தற்போது மழை காலம் என்பதால் ரோடு பெரிய அளவில் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. அந்த பகுதியில் உள்ள பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிக்கு உள்ளவர்கள். எனவே மாவட்ட நிர்வாகம் அதிக எடை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க கேட்டு சித்திரன்கோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் சங்க தலைவர் யேசுராஜா தலைமையில் மாவட்ட பொருளாளர் ஐஜிபி. லாரன்ஸ் வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெப சிங்குமார் முன்னிலையில் எடை மேடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் வேர்கிளம்பி பேரூராட்சி உறுப்பினர்கள் சிங், ராஜேஸ், ராமன் ரஜினி மற்றும் கட்சி நிர்வாசிகள் எட்வர்ட் நிக்சன், ஊர் பொதுமக்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.