கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம்
- மூலஸ்தானத்தில் 5½ அடி உயரத்தில் லிங்க வடிவத்தில் குகநாதீஸ்வரர் காட்சியளிக்கிறார்.
- ஆடி கிருத்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டுவதற்கு முன்பே இந்த கோவிலைகட்டி உள்ளார் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
இங்கு குகன் என்ற முருகடவுள் சிவன் என்ற ஈஸ்வரனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணமாயிற்று. இங்கு உள்ள மூலஸ்தானத்தில் 5½ அடி உயரத்தில் லிங்க வடிவத்தில் குகநாதீஸ்வரர் காட்சியளிக்கிறார். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்த ருளியுள்ள சன்னதியும் அமைந்து உள்ளது. இங்கு ஆடி கிருத்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சாஸ்தா சன்னதியில் இருந்து பக்தர்கள் தோளில் காவடி எடுத்து கோவிலை சுற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி உள்ள சுப்பிரமணிசாமிக்கு எண்ணெய், பால் தயிர், நெய், விபூதி, சந்தனம், மஞ்சள் பொடி, இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும்புனிதநீரால்சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் 11.30 மணிக்கு அலங்கார தீபாரதனையும் பகல் 12 மணிக்கு பல வண்ணமலர்களால் அல ங்கரிக்கப்பட்ட மயில் வாக னத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை யுடன் எழுந்தருளி மேளதா ளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அருட் பிர சாதம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்துஇருந்தனர்.