நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான திறன் போட்டி தேர்வு நாளை நடக்கிறது
- காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடக்கிறது.
- https//naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
நாகர்கோவில் :
உலக திறன் போட்டிகள் 1950-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 77 நாடுகள் பங்குபெறும் 47-வது உலகத்திறன் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் அடுத்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த 748 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து முதற்கட்டமாக போட்டியாளர்களின் திறன்களை சோதித்தறியும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கான தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடக்கிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களின் நுழைவுச்சீட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் https//naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04652-264463, 94435 79558 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.