ஈத்தாமொழியில் 48 பவுன் திருட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் சிக்கியது - தனிப்படை போலீசார் விசாரணை
- பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 48 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
- சுபா வீட்டில் இருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில் :
ஈத்தாமொழி அருகே காளிச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் வெளிநாட்டில் தையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி சுபா (வயது 47). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மகள் மணவாளக்குறிச்சி பகுதி யில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ராமச்சந்திரனும் அவரது மகனும் வெளியூர்களில் உள்ள நிலையில் வீட்டில் சுபாவும் அவரது மகளும் வசித்து வந்தனர்.
சுபா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகளுடன் வல்லன்குமாரன் விளையில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றார். நேற்று மாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுபா உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 48 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
வீட்டில் 2 இடங்களில் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி இருந்தது. அந்த கைரேகை களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் சுபா வீட்டில் இருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்தும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.