அருமனையில் தோட்ட காவலாளி மர்மச் சாவு
- பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்
- ஜான்ரோஸ் இறந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது.
அருமனை :
குலசேகரம் கோட்டூர் கோணத்தை சேர்ந்தவர் ஜான்றோஸ் (வயது 65). இவர், குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த தோட்டம் திருவனந்த புரத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சொந்த மானதாகும். ஜான்ரோஸ் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு சென்று வருவார்.
இந்நிலையில் அவரது மகன் கில்பர்ட்டின் நிச்சய தார்த்தம் இன்று நடைபெற இருந்தது. இதற்காக ஜான்ரோஸ் நேற்று வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார்.
ஆனால் அவர் வர வில்லை. இதனை தொடர்ந்து மனைவி ராணி, மகனுடன் இன்று காலை அருமனை குஞ்சாலு விளையில் தனது கணவர் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவுகள் திறக்காமல் இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் ஜான் ரோஸ் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அருமனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுனில் குமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தோட்டத்தின் உரிமையாளர் பிரசாந்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஜான்ரோஸ் இறந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜான் ரோசின் மரண செய்தி கேட்டு கோட்டூர் கோணம் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.