உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயம் பழுது-சீரமைப்பு பணிக்கு அரசு நிதி - கலெக்டர் தகவல்

Published On 2022-09-13 09:15 GMT   |   Update On 2022-09-13 09:15 GMT
  • தேவாலய கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10முதல் 15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சம் நிதியுதவி
  • 15முதல் 20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சமும் 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சம் வரை நிதியுதவி

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குமரி மாவட்டத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் ஏற்பட்டு உள்ள பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தேவாலயங்களில் ஏற்பட்டு உள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10முதல் 15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15 முதல் 20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சமும் 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் (பிற்சேர்க்கை-III) அளிக்க வேண்டும்.

சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை அதிலுள்ள பிற்சேர்க்கை-II & III-ல் உள்ளவாறு பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவின ரால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவரால் பரிந்துரை செய்யப்படும்.

நிதி உதவி இரு தவணை களாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

எனவே மாவட்டத்தில் தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பம் செய்திடலாம்.

இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

Tags:    

Similar News