கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பட்டதாரி பெண் இரு சக்கர வாகன பயணம்
- கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருசக்கர வாகன பயணம் நடத்த முடிவு
- பல்வேறு மாநிலங்கள் வழியாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி காஷ்மீர் சென்றடைகிறார்.
கன்னியாகுமரி :
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கிருஷ்ணாபுரதொட்டி பகுதியை சேர்ந்தவர் சித்ரா ராவ் (வயது 24). இவர் நடன கலைஞர் ஆவார். எம்.பி.ஏ.பெண் பட்டதாரியான இவர் பெற்றோர்களை கைவிடக்கூடாது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருசக்கர வாகன பயணம் நடத்த முடிவு செய்து இருந்தார்.
அதன்படி அவரது இருசக்கர வாகன பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட நேருயுவ கேந்திரா கணக்கு மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர் ரெங்கநாதன், மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஞானச்சந்திரன், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு இருசக்கர வாகன பயணம் மேற்கொண்ட சித்ராராவ் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு செல்லும்போது அவரது தாயாரான கவிதா, அவரை கட்டித்தழுவி வழி அனுப்பி வைத்தார். இவர் பல்வேறு மாநிலங்கள் வழியாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி காஷ்மீர் சென்றடைகிறார்.
மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 590 கிலோ மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து செல்கிறார். அதன்பிறகு மீண்டும் காஷ்மீரில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து பெங்களூரில் தனது இருசக்கர வாகன பயணத்தை நிறைவு செய்கிறார்.