நாகர்கோவிலில் 10 இடங்களில் ரூ.25 லட்சம் செலவில் நலவாழ்வு மையம் - மேயர் மகேஷ் தகவல்
- நாகர்கோவில் நகரை அழகுபடுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
- சாலை யோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நாகர்கோவில் நகரை அழகுபடுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டதி பள்ளி சந்திப்பில் இருந்து வேப்பமூடு வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்து அழகுப்படுத்த ரூ.1.50 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பணிகளை மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த் மோகன், என்ஜினீயர் பாலசுப்ரமணியன், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாலை யோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக டதி பள்ளி சந்திப்பில் இருந்து வேப்பமூடு சந்திப்பு வரை உள்ள சாலையை விரிவுபடுத்தி அழகுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்த பகுதியில் கழிவு நீரோடை சீரமைக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பொது மக்கள் நடந்து செல்ல வசதியாக நடை பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டதி பள்ளி சந்திப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இனி கார் பார்க்கிங் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
மேலும் இந்த சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவதற்கான நட வடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகிறது. அலங்கார விளக்குகளும் அமைக்கப்படும். இதே போல் நாகர்கோவில் மாநகர பகுதியில் 10 இடங்களில் தலா ரூ.25 லட்சம் செலவில் நல வாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் இருந்து வெட்டூர்ணிமடம் வரை உள்ள சாலையை மேம்படுத்த ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சாலை இருவழி சாலையாக மாற்றப்படுவதுடன் கழிவுநீரோடையும் சீரமைத்து அலங்கார விளக்குகள் அமைப்ப தற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் நாகர்கோவில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.