மார்த்தாண்டத்தில் நள்ளிரவில் நடைபாதையை உடைத்தவர்களுடன் பா.ஜனதாவினர் வாக்குவாதம்
- பதட்டம் நிலவியதால் போலீசார் விரைந்தனர்
- தாங்களாகவே படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் உள்ளன.
குழித்துறை :
மார்த்தாண்டம் பகுதியில் பம்மத்திலிருந்து வெட்டுமணி வரை 2¾ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சாலையின் இரு பக்கங்களிலும் பொது மக்கள் நடந்து செல்ல நடை பாதை அமைக்கப்பட்டது.
இதில் பொது மக்களுக்கு நடந்து செல்ல வசதியாக பல பகுதிகளில் படிக்கட்டு களும் அமைக்கப்ப ட்டுள்ளது. இதில் உயர்வாக காணப்படும் பகுதிகளில் சில கடை வியாபாரிகள், ஆக்கிரமிப்பு செய்ததோடு தங்களுக்கு வசதியாக கடைகளில் இருந்து நடைபாதைக்கு செல்லும் வழியின் மேற்பகுதிகளில் சீட்டுகளை அமைத்து கடையாக மாற்றி உள்ளனர். மேலும் சாலையிலிருந்து கடைக்கு செல்ல நடை பாதையை உடைத்து, தாங்களாகவே படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் காந்தி மைதானத்தை தொட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு படி அமைக்க முயன்றனர். அவர்கள் கனரக வாகனம் மூலம் நடைபாதையை உடைத்தனர். மேலும் நடைபாதையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கிரில்களையும் உடைத்து எடுத்துள்ளனர்,
இதை கேள்விப்பட்ட பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு, குழித்துறை நகர பா.ஜ.க. தலைவர் சுமன், கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் பிரதாப், உமேஷ் உட்பட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள் நடைபாதையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததோடு போராட்டமும் நடத்தினர்.
இதையடுத்து சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நடைபாதையை இடிக்க பயன்படுத்திய கனரக எந்திர வாகனம் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.