சகாயநகர் ஊராட்சியில் விளையாட்டு திடலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் உண்ணாவிரதம்
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- விளையாட்டு போட்டி நடத்த தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தார்
ஆரல்வாய்மொழி :
ஆரல்வாய்மொழி அருகே உள்ள சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட அனந்த பத்மநாபபுரம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்டம் தழுவிய பல்வேறு அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது உண்டு.
இந்த ஆண்டு விளையாட அனுமதி கேட்டு ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு மனு அனுப்பப்பட்டது. போட்டியை நடத்தவும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.இந்த நிலையில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜா, சுந்தர்சிங், கீதா மற்றும் போலீசார், விளையாட அனுமதி இல்லை என கூறி எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் அந்த பகுதி பரபரப்பானது. அந்த பகுதி இளைஞர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தர்மர் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்குமார் ஆகியோரும் அங்கு வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. முறைப்படி அனுமதி பெற்று மீண்டும் விளையாட்டு போட்டி நடத்த தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தார். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.