குளச்சல் அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலைக்கு மினி பஸ் டிரைவர் காரணமா?
- நேரம் காலம் இல்லாமல் அவர் செல்போனில் பேசி சுஜிலாவுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.
- மினிபஸ் டிரைவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே லட்சுமிபுரம் தாவூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது32). எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜிலா (28).
இருவரும் 8 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.சுஜிலா நாகர்கோவில் அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்தார்.தற்போது ஆனந்த் மற்றும் சுஜிலா அருகில் காரியாவிளையில் உள்ள ஆனந்தின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக சுஜிலா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜிலா வசித்து வந்த காரியாவிளை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுஜிலாவின் தாய் விஜயகுமாரி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் சுஜிலா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது உடல் பரிசோதனை செய்ய ப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை ஆனந்தின் சகோதரி வெளிநாட்டிலிருந்து புறப்பட்டு ஊருக்கு வருகிறார்.
அதன்பின்பு சுஜிலா உடல் ஊருக்கு எடுத்து அடக்கம் செய்யப்படும் என ஆனந்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர். சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியது திங்கள்நகர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மினி பஸ் டிரைவர் என தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் அவர் இறந்த பின்பும் அவரது செல் போனுக்கு அழைப்பு வந்தது.செல்போனை போலீசார் எடுத்து பேசினர்.அப்போது பேசிய மினி பஸ் டிரைவர் கோபத்தில்தான் பேசியுள்ளார்.இதனால் இவர்தான் அவரை தற்கொலை தூண்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுஜிலாவின் செல்போனுக்கு வந்த அழைப்பு விபரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இதன் முடிவில் சுஜிலா தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்படும் என போலீசார் கூறினர். போலீசார் தன்னை தேடுவதாக அறிந்த மினிபஸ் டிரைவர் தலைமறைவாகி விட்டார்.அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.அவரை பிடித்து விசாரித்தால்தான் சுஜிலா மரணத்திற்கு காரணம் என்னவென்று தெரியும் என கூறினர்.
தற்கொலை செய்து கொண்ட சுஜிலா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.அதில் மினிபஸ் டிரைவர் ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் 'ஐ மிஸ் புருஷா'என காதல் கணவன் ஆனந்தை குறிப்பிட்டுள்ளார்.குழந்தைகள் சாக்லெட் சாப்பிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்'எனவும் ஆனந்தை அவர் கேட்டு எழுதியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
சுஜிலா அடுத்த மாதம் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார்.மினி பஸ் டிரைவருடன் ஏற்பட்ட பழக்கத்தால், மினி பஸ் டிரைவர் இரவு வேளையிலும் சுஜிலாவுக்கு போன் செய்து டார்ச்சர் கொடுப்பாராம்.சுஜிலா வெளிநாடு செல்வதை மினிபஸ் டிரைவர் விரும்பவில்லையாம்.இதனால் நேரம் காலம் இல்லாமல் அவர் செல்போனில் பேசி சுஜிலாவுக்கு தொல்லை கொடுத்து வந்தாராம்.நேற்று முன்தினமும் அவர் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலின் உச்சத்திற்கு சென்ற சுஜிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றனர்.
சுஜிலாவுக்கு கடும் தொல்லை கொடுத்து வந்த மினிபஸ் டிரைவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.