களியக்காவிளை அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
- கதவை உடைத்து மர்ம நபர்கள் துணிகரம்
- திட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே உள்ள வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் ரெகுவரன் நாயர், ஓய்வு பெற்றவர் ராணுவ வீரர். இவரது மகன் திருமணம் முடிந்து கொடைக்கானலில் வசித்து வருகிறார்.
இதனால் ரெகுவரன் நாயரும் அவருடைய மனைவியும் வன்னியூரில் குடும்ப வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 15-ந் தேதி மகனை பார்ப்பதற்காக கொடைக் கானல் சென்றனர். சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த அவர்கள் முன்பக்க கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது அறை கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.22 ஆயிரம் மற்றும் 1½ பவன் நகை திருட்டு போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த யாரோ மர்ம நபர்கள் திட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ரெகுவரன் நாயர், களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டில் கதவை உடைத்து நகை பணம் திருடிய சம்பவம் அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.