சூரிய கிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 3 மணி நேரம் நடை அடைப்பு
- இரவு 7 மணிக்கு பிறகு பரிகார பூஜைகள் முடிந்து நடை திறக்கப்படுகிறது
- பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி:
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி சூரிய கிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 3 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.
மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இந்த 3 மணி நேரமும் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சூரிய கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது.
சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.