உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

நாகர்கோவில் பாலியல் புகாரில் கைதான காசியின் நண்பரிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

Published On 2022-11-21 10:02 GMT   |   Update On 2022-11-21 10:02 GMT
  • குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தீவிரம்
  • கவுதமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி. இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து காசியை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட காசி மீது மேலும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காசி மீது பாலியல் புகார் உள்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதையடுத்து வழக்கானது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் காசி மீதான வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் ஆதாரத்தை அழித்ததாக கூறி அவரது தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதே சமயம் அஞ்சுகிராமம் அருகே கண்ணன்குளத்தை சேர்ந்த கவுதம் என்பவர் தலைமறைவாக இருந்தார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில் அவர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க விமான நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த 8 வழக்குகளில் 6 வழக்குகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 2 வழக்குகளில் கவுதமுக்கு தொடர்பிருந்ததால் அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. காசிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கவுதம் வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்தார். இதுதொடர்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருவனந்தபுரம் சென்று விமான நிலையத்தில் இருந்த கவுதமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து 2 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து கவுதமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து கவுதமனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்படி போலீசார் கவுதமை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். காசிக்கும், கவுதமுக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் காசிக்கு உதவியாக பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மீண்டும் கவுதமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் மேலும் 2 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்த வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

Similar News