விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோடிமுனை மீனவர்கள் மனு
- சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ளனர்
- குமரி மீனவர்கள் சங்கு குளிக்கும் சீசனில் தூத்துக்குடி சென்று தொழில் செய்கின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை ஆகிய கடலோர கிராமங்களை சேர்ந்த சங்கு குளிக்கும் மீனவர்கள் கோடிமுனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய்வசந்த் எம்.பி.யை சந்தித்து மனு அளித்தனர்.
அதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சங்கு குளிக்கும் மீனவர்கள் பாரம்பரியமாக தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடல் பகுதியில் சங்கு குளிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ளனர்.இதனால் குமரி மீனவர்கள் சங்கு குளிக்கும் சீசனில் தூத்துக்குடி சென்று தொழில் செய்கின்றனர். தொழில் ரீதியாக குமரி மீனவர்கள் தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்களுடன் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை மீனவர்கள் தொழிலுக்கு செல்லும்போது ஒரு சில மீனவர்கள் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி இங்கு நீங்கள் தொழில் செய்யக்கூடாது என விரட்டி உள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.காலங்காலமாக செய்து வரும் எங்கள் தொழில் கேள்வி குறியாகி உள்ளது. எனவே குமரி மீனவர்கள் தொடர்ந்து திரேஸ்புரத்தில் சங்கு குளிக்கும் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்வின், துணைத்தலைவர் லாலின் மற்றும் ஊராட்சி காங்.நிர்வாகிகள் ஆகியோர் மனு கொடுக்கும் போது உடனிருந்தனர்.