குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோகன் ஒ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு
- குமரி மாவட்டத்திலும் ஒ.பி.எஸ்-இ.பி.எஸ். ஆதரவாளர்கள் மாறி மாறி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
- எடப் பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வம் தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்
நாகர்கோவில் :
அ.தி.மு.க.வில் கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.
இருவரின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்களுக்காக போஸ்டர் அடித்து ஆதரவை வெளிக்காட்டி வருகின்றனர். குமரி மாவட்டத்திலும் ஒ.பி.எஸ்-இ.பி.எஸ். ஆதரவாளர்கள் மாறி மாறி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வம் தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரையும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மாறி மாறி சந்தித்து பேசி வருகின்றனர்.
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் ஆதரவு யாருக்கு அதிகம் உள்ளது என்பது தொடர்பாக 2 தலைவர்களும் தனித்தனியாக ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், இன்று காலை ஒ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
தற்போதைய நிலைமை குறித்து அவர் கருத்துக்களை கூறியதாக தெரிகிறது. எஸ்.ஏ.அசோகன் ஏற்கனவே ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 தலைவர்களையும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசி வருவது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.