திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
கன்னியாகுமரி:
திருவட்டார் ஆதி கேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (ஜூலை) 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவில் கருவறை விமானம், உதய மார்த்தாண்ட மண்டபம், மேற்கூரை, அஷ்ட பந்தன காவி பூசப்பட்டு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கலசங்கள் பொருத்தப்பட உள்ளது. கிருஷ்ணன் கோவிலில் செம்பிலான கும்ப கலசங்கள் உருவாக்கப்பட்டு ஒசூரில் தங்க முலாம் பூசுவதற்காக கொண்டு செல்லப்பட்டன.
ஒசூரில் தங்கமுலாம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. கருவறை மூலவர் சன்னதியின் மேற்பகுதியில் 5 கலசங்களும், ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல்பகுதி கூரையில் ஒரு கலசமும் உதய மார்த்தாண்ட மணடபத்தின் மேல் ஒரு கலசமும் பொருத்தப்பட உள்ளது. முக்கிய கலசம் 3 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. ஒசூரில் தங்கமுலாம் பூசும் பணிகள் நிறைவடைந்ததும் கும்ப கலசங்கள் திருவட்டாருக்கு கொண்டு வரப்பட்டு விமானத்தில் பொருத்தப்படும்.
கோவில் பிரமாண்டமாக இருப்பதாலும், கோவில் வளாகத்தில் போதிய இட வசதிகள் குறைவாக இருப்பதாலும் கும்பாபி ஷேகத்தை பக்தர்கள் நேரில் காண்பதில் சிரமங்கள் இருப்பதை கருத்தில் கொண்டு கோவில் உள் பகுதி மற்றும் வெளிப்புறங்களில் பல இடங்களில் பெரிய அளவிலான் எல்.இ.டி. டிவி.கள் அமைக்க அறநிலையத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது. எந்தெந்த இடங்களில் அகன்ற திரை டி.வி.க்கள் வைக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று சுவாமியின் பாதத்தில் பூஜையில் வைக்க ப்பட்ட கும்பாபி ஷேக விழா அழைப்பிதழ் பக்தர்களுக்கு வினி யோகிக்கப்பட்டது. முதல் அழைப்பிதழை அறநிலையத்துறை தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் வழங்கினார்கள். தொடர்ந்து பக்தர்களுக்கு அழைப்பிதழ் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மோகன் குமார், வள்ளலார் பேரவை பத்மேந்திரா சுவாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதிகேசவலு மற்றும் மகாதேவன் ஆகியோர் குடும்பத்துடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். திருவட்டார் நான்குமுனை சந்திப்பிலிருந்து கோவில் வரை குண்டு குழிகளுடன் இருந்த சாலைப்பகுதி நேற்று சரி செய்யப்பட்டது. தொடர்ந்து பந்தல் அமைக்கும் பணிகள், விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.