கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் "மகா தீபம்" ஏற்றப்பட்டது
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பங்கேற்பு
- அம்மனின் கால் பாதத்துக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் கார்த்திகை தீபத்திரு விழாவையொட்டி நேற்று மாலை மகாதீபம் ஏற்றப் பட்டது. இதையொட்டி நேற்று மாலை பகவதி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த ஊர்வலம் சன்னதி தெரு வழியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறையை சென்ற டைந்தது. பின்னர் அங்கு இருந்து தனி படகு மூலம் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றனர். அங்குள்ள ஸ்ரீபாதமண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மனின் கால் பாதம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், மஞ்சள் பொடி, பால், பன்னீர், தயிர், இளநீர், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் அம்மனின் கால் பாதத்துக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி சீனிவாசன் போற்றி கார்த்திகை தீபத்தினை ஏற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாதமண்டபத்தின் மேற்குப்பக்கம் உள்ள வெளிபிரகாரத்தில் வைத்தார். இந்த கார்த்திகை தீபம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவில் கிழக்குவாசலை நோக்கி வைக்கப்பட்டது. கன்னியா குமரி கடற்கரையில் நின்ற வாறு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கார்த்திகை தீபத்தை பார்த்து வணங்கி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரு மான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., குமரி மாவட்ட திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன், விவே கானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி. தாணு, பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.