உள்ளூர் செய்திகள்

போர்கால அடிப்படையில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-04-19 07:10 GMT   |   Update On 2023-04-19 07:10 GMT
  • சுழற்சி முறையில் 18 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
  • புத்தன் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகர்கோவில் :

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சியில் சுமார் 3 ½ லட்சம் மக்கள் வசித்து வருகின்ற னர். மேலும் தினமும் பல பகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வணிகரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். முக்கூடல் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்த காரணத்தினால் நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்களுக்கு சுழற்சி முறையில் 18 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பெண்களும், குழந்தைகளும் குடங்களை எடுத்துக் கொண்டு மாநகராட்சி அருகே உள்ள ஊர்களுக்கு சென்று தண்ணீருக்காக அலைய வேண்டிய ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு மாநகராட்சி நிர்வாகம் கோடை காலத்திற்கு முன்பாகவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநகராட்சி எடுக்க தவறிவிட்டது. இது சம்பந்தமாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நாகர்கோவில் மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்கும் விதத்தில் புத்தன் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி தண்ணீர் தட்டுப்பாட்டினால் அவதிப்படுகின்ற பொதுமக்களின் துயர் போக்கும் விதத்தில் சுழற்சி முறையில் லாரியில் தண்ணீர் நிரப்பி ஒவ்வொரு வார்டு வாரியாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆள்துணை கிணத்தினை போர்கால அடிப்படையில் சரிசெய்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி வழியாக தண்ணீரை விநியோகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்கும் விதத்தில் துரிதமாக செயல் பட்டு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News