நாகர்கோவிலில் இன்று சிறுபான்மை மக்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
- 66 பேருக்கு தலா ரூ.6ஆயிரம் என மொத்தம் 102 பேருக்கு ரூ.6 லட்சத்து 12 ஆயிரம் நிதி உதவி
- “ஒன்றிணைவோம் வா” என்று அழைப்பு விடுத்ததின் மூலம் 100 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு மக்களுக்காக செலவு செய்யப்பட்டு உள்ளது
நாகர்கோவில் :
சிறுபான்மை நலத்துறை சார்பில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முஸ்லிம் உதவும் சங்கங்கள் சார்பில் 17 பேருக்கு தையல் எந்திரங்களும், 19 பேருக்கு மாவு அரைக்கும் எந்திரங்களும் இதர தொழில் தொடங்க 66 பேருக்கு தலா ரூ.6ஆயிரம் என மொத்தம் 102 பேருக்கு ரூ.6 லட்சத்து 12 ஆயிரம் நிதி உதவியை அவர் வழங்கினார்.
கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் 5 பேருக்கு தையல் எந்திரமும் 26 பேருக்கு மாவு அரைக்கும் எந்திரமும் சிறு தொழில் தொடங்க 3 பேருக்கு தலா ரூ. 6 ஆயிரம் என மொத்தம் 34 பேருக்கு ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டது.
மேலும் உலமாக்கள் நல வாரிய புதிய உறுப்பினர் அட்டையையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கி னார். சிறுபான்மையினர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 41 பெண்களுக்கு ரூ.12 லட்சத்து 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இன்று நடந்த விழாவில் 183 பேருக்கு ரூ.20 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
சிறுபான்மை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் கடந்த ஒராண்டில் பல்வேறு திட்டங்களை செய்து முடித்துள்ளார். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைத்து வருகிறார். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் "ஒன்றிணைவோம் வா" என்று அழைப்பு விடுத்ததின் மூலம் 100 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு மக்களுக்காக செலவு செய்யப்பட்டு உள்ளது.
தடுப்பூசி மூலம் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில் தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பெரிய வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்.
அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட த்தில் இது போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்ட த்திற்கு அதிகமான நிதி கிடைக்க நான் முயற்சி மேற்கொள்வேன். குமரி மாவட்டம் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் மாவட்டமாகும். கல்வியின் மூலமாகத்தான் வாழ்வா தாரத்தை உயர்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா கலந்து கொண்டார்.