முதியோர் இல்லத்திற்கு நவீன படுக்கை வசதி
- முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பிள்ளைகள். பெற்றோர்களை முதுமையில் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும்
நாகர்கோவில் :
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேசமணிநகர் சிநேகம் முதியோர் இல்லத்திற்கு தொழிலதிபர் டாக்டர் சுஜின் ஜெகேஷ் சார்பில் கழிவறையுடன் கூடிய நவீன கட்டில் மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர், நவீன கட்டிலை முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் லதா கலைவாணனிடம் வழங்கினார்.
பின்னர் மேயர் மகேஷ் பேசியதாவது:-
பிள்ளைகள். பெற்றோர்களை முதுமையில் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் பெற்றோர்கள் தங்களை வளர்த்து ஆளாக்குவதற்கு எவ்வளவு தியாகங்களை செய்கிறார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். உங்கள் பெற்றோர்களை நீங்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கும்போது, உங்கள் பிள்ளைகள் நாளை உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க மாட்டார்கள் என என்ன நிச்சயம். கலைஞர் முதியோர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அத்தகைய தலைவரின் நூற்றாண்டு விழாவில் இத்தகைய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன், மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.