நாகர். 50-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
- பொது மேலாளரிடம் கோரிக்கை மனு
- கொரோனா காலகட்டத்தில் இருந்து அந்த பேருந்து தற்போது வரை இயக்கபடவில்லை.
என்.ஜி.ஓ.காலனி :
நாகர்கோவில் மாநக ராட்சி 50-வது வார்டுக் குட்பட்ட பொட்டல் விளை, வண்டிகுடியிருப்பு கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு முகிலன் விளை, என்.ஜி.ஓ.காலனி வழியாக நாகர்கோவிலுக்கு செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவல கங்களில் பணிபுரிபவர்க ளுக்கும் செல்வதற்கு சிரம மாக இருந்து வருகின்றனர்.
இதற்கு முன் இந்த வழித்தடத்தில் 37 ஏ நாகர்கோவிலில் இருந்து பேருந்து இந்த வழித்தடத்தில் இயங்கி கொண்டு இருந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இருந்து அந்த பேருந்து தற்போது வரை இயக்கபடவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரும், பா.ஜ.க.பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவருமான ஜவான் டி.அய்யப்பனிடம் கோரிக்கை வைத்தார்கள். அவர் நிறுத்தப்பட்ட அந்த பேருந்தை மீண்டும் இயக்க நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தியிடம் நேரில் சென்று வலியுறுத்தினார். உடனடியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ராணித்தோட்ட பொது மேலாளரை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.வும், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான்.டி.அய்யப்பனும் சேர்ந்து நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தினார்கள்.