நாகர்கோவில் மாநகராட்சி 13-வது வார்டில் ஆணையாளர் திடீர் ஆய்வு
- ஆக்கிரமிப்பால் தண்ணீர் சீராக செல்வது இல்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டினர்.
- 11-வது வார்டு பகுதியில் ஆணையர் ஆனந்த மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் 13-வது வார்டு பகுதியான தழுவியபுரம் ஒற்றைதெரு, ரவிவர்மன்தெரு, புளியவிளை தெரு உள்ளிட்ட பகுதியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கழிவுநீர் ஓடைகளில் அடைப்பு, ஆக்கிரமிப்பால் தண்ணீர் சீராக செல்வது இல்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டினர்.
மேலும் குடிநீர் சரியாக வருவது இல்லை. வசதி படைத்தவர்கள் வீட்டில் பெரிய தொட்டி அமைத்து, குடிநீர் பிடிக்கின்றனர். இதனால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பது சிக்கலாக உள்ளது. இதனை சரிசெய்து, போதிய அளவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து ஆணையர் கழிவுநீர் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் கழிவுநீர் ஓடையின் மீது பெரிய அளவில் போடப்பட்டு இருக்கும் காங்கீரிட் பாதைகளை அகற்ற வேண்டும். மேலும் அனைத்து வீடுகளுக்கும் ஒரே மாதிரி குடிநீர் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து 11-வது வார்டு பகுதியில் ஆணையர் ஆனந்த மோகன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை, கவுன்சிலர் ஆச்சியம்மாள் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.