உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் திருவிழா இன்று தொடக்கம்

Published On 2023-08-28 06:40 GMT   |   Update On 2023-08-28 06:40 GMT
  • ஓணக்கோடி பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு
  • அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி பகவதி அம்மனுக்கு சிவப்பு நிறபட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் திருவிழா இன்று தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 30-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

முதல் நாளான இன்று உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி பகவதி அம்மனுக்கு பச்சைநிறப்பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை 4-/30 மணிக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. பின்னர் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீபலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷா தீபாராதனை போன்றவை நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடிபட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனையும் நடந்தது. சாயராட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளச்செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை எழுந்தருளசெய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அத்தாழ பூஜையும்ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

திருவோணம் நட்சத்திரமான நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு கேரள பாரம்பரிய உடையான வெண்பட்டு ஓணக்கோடியாக அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) அவிட்டம் நட்சத்தி ரத்தையொட்டி காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு சிவப்பு நிறபட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News