உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் புதிய மாநகராட்சி அலுவலகத்தை கலைவாணர் பெயர் இல்லாமல் திறந்தால் கண்டிக்கத்தக்கது - முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2023-02-28 09:31 GMT   |   Update On 2023-02-28 09:31 GMT
  • வருகிற 6-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க வருகிறார்.
  • புதிய அலுவலகத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்

நாகர்கோவில் :

நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே கலைவாணர் கலையரங்கம் இருந்தது. அந்த அரங்கத்தை மாற்றி விட்டு தற்பொழுது புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.

இந்த புதிய அலுவலகத்தை வருகிற 6-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க வருகிறார். இது மகிழ்ச்சி தருகிறது. அவர் வருகைக்கு முன்னதாக ஒன்றை உறுதி செய்து விட்டு இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும்.

ஏற்கனவே புதிய அலுவ லகம் கட்டப்பட்டுள்ள இடம் கலைவாணர் அரங்கம் என்ற பெயரில் இருந்ததால் புதிய அலுவலகத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது.

ஆனால் தற்போதைய மேயர் மகேஷ், கருணாநிதி அரங்கம் என்று சூட்ட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கட்டிடத்திற்கு கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது கலைவாணர் பெயர் இல்லாமல் திறந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும்.

இந்த மண் கலைவாணர் பிறந்த மண்ணாகும். அவரது பெயரை வைக்காமல் புதிய அலுவலகம் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டிடத்தில் இதுவரை அவரது பெயர் இடம் பெறவில்லை. திறப்பு விழாவிற்கு முன்னதாக கட்டிடத்தில் கலைவாணர் பெயர் இடம் பெற வேண்டும். இது தொடர்பாக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். அவர் பெயர் இடம் பெறாமல் இருந்தால் முதல்-அமைச்சர், தனது நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News