தாமரைகுளம் பதி முன்பு நுழைவுவாயில் கட்ட எதிர்ப்பு
- அறநிலையத்துறை சார்பில் 20-ந்தேதி பேச்சுவார்த்தை
- தற்காலிகமாக பள்ளத்தை மூடுவதற்கு உயர் அதிகாரியிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
தென்தாமரைகுளம் :
தென்தாமரைகுளத்தில் அமைந்துள்ள தாமரைகுளம் பதி முன்பு இந்து அறநிலையத்துறை சார்பில் நுழைவுவாயில், சுற்றுசுவர் கட்ட கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒரு தரப்பினர் மனு அளித்த னர்.
இது தொடர்பான பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நேற்று மாலை பதி முன்பு நடைபெற்றது. குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவர் ராஜன், உதவி ஆணையர் தங்கம், செயல் அலுவலர் ரெகு, தாசில்தார் சஜித் ஆகியோர் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் வருகிற 20-ந்தேதி அறநிலையத்துறை அலுவலகத்தில் வைத்து மீண்டும் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அஸ்திவாரம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தைகள், வயதானவர்கள் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது என பெண்கள் உட்பட பலர் தெரிவித்தனர். இதனையடுத்து தற்காலிகமாக பள்ளத்தை மூடுவதற்கு உயர் அதிகாரியிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.