உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் இருந்து மதுரைக்கு புத்த மதத்துறைவிகள் அமைதி நடைபயணம்

Published On 2023-09-17 07:29 GMT   |   Update On 2023-09-17 07:29 GMT
  • அக்டோபர் மாதம் 2-ந்தேதி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தை சென்றடைகிறது.
  • அமைதி நடைபயணம் மொத்தம் உள்ள 700 கிலோ மீட்டர் தூரத்தை 17 நாட்களில் கடந்து செல்கிறது.

கன்னியாகுமரி :

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153-வது பிறந்த நாள் விழா வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புத்தமத அமைப்பான நிப்போன்சான் மயோகோஜி என்ற அமைப்பும் இணைந்து அமைதி மற்றும் அகிம்சைக்காக கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை புத்த மத துறவிகள் காந்திய வழியில் அமைதி நடைபயணம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இந்த நடை பயணம் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கியது. இந்த நடைபயணத்துக்கு புத்த மத துறவி இஸ்தானி தலைமை தாங்கினார். புத்த மதப்பெண் துறவிகள் லீலாவதி, கிமுரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அமைதி நடைபயணத்தை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த புத்தமத துறவிகளின் அமைதி நடைபயணம் கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழி, நாங்கு நேரி, சங்கரன்கோவில் ராஜபாளையம், கல்லுப்பட்டி வழியாக காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தை சென்றடைகிறது.

இந்த அமைதி நடைபயணம் மொத்தம் உள்ள 700 கிலோ மீட்டர் தூரத்தை 17 நாட்களில் கடந்து செல்கிறது.

Tags:    

Similar News