நாகர்கோவிலில் திறந்தவெளியில் உணவு தயாரித்த 4 ஓட்டல்களுக்கு அபராதம்
- சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் தயாரிக்க வேண்டும்.
- ஓட்டல்களில் வெளியே சமையல் செய்ய கூடாது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள சில ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் திறந்த வெளிகளில் உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து மாநக ராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் ஓட்டல் உரிமையாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். திறந்த வெளி களில் உணவுப் பொருட்கள் தயாரிக்க கூடாது. சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் தயாரிக்க வேண்டும்.
ஓட்டல்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என்பது உட்பட 12 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு இதை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தவும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதற்காக அவர்களுக்கு 21 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டது.
இந்தக் கெடு முடிந்த நிலையில் இன்று மாநகர பகுதியில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். வடசேரி பஸ் நிலையத்தில் சுகாதார ஆய்வாளர்கள் ஜான், ராஜேஷ் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஓட்டல்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது திறந்த வெளிகளில் புரோட்டா, தோசை தயாரிக்கும் கற்கள் போடப்பட்டு உணவு பொருட்கள் தயார் செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் அடுப்புகள் வெளியே அமைத்து உணவு பண்டங்கள் தயார் செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து அந்த கடைகளில் இருந்த பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 4 கடைகளில் இருந்து புரோட்டா கற்கள் மற்றும் அடுப்பு போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதமும் விதிக்க ப்பட்டது. 4 கடைகளுக்கும் ரூ.4ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை நாகர்கோவில் மாநகரம் முழுவதும் தொடர்ந்து நடை பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மேயர் மகேஷ் கூறுகையில், ஓட்டல் உரிமையாளர்களை அழைத்து ஏற்கனவே பேசி இருந்தோம். அவர்களுக்கு 21 நாட்கள் காலக்கடு விதிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் ஓட்டல்களில் வெளியே சமையல் செய்ய கூடாது. தரமான வகையில் பொது மக்களுக்கு உணவு பொருட்களை வழங்க வேண்டும். இல்லாத ஹோட்டல் உரிமையாளர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளோம் என்றார்.