உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் பகுதியில் சாலையில் திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-11-06 07:18 GMT   |   Update On 2023-11-06 07:18 GMT
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
  • குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது

நாகர்கோவில், நவ.6-

வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, பறக்கை, கோட்டாறு, ஆசாரிபள்ளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் அதிக அளவில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

தற்போது தெருநாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் உணவு கிடைக்காத வேளைகளில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தூரத்தி செல்கிறது. அப்போது சிலர் சாலைகளில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். சிலரை தெரு நாய்கள் கடித்தும் உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, சாலைகளின் குறுக்கே திடீரென நாய் புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வரும் சம்பவமும் நடக்கிறது. மேலும் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் முடிகள் உதிர்ந்த நிலையில் நோய் வாய்பட்டும், காயங்களுடனும் காணப்படுகிறது. இவ்வாறு நோய்கள் பாதித்த நாய்கள் பொதுமக்கள் அருகில் வரும்போது அவர்கள் கூடுதல் அச்சம் அடைகின்றனர்.

தெருநாய்களின் தொல்லை அதிகம் உள்ள பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த சாலையை விட்டு விட்டு தெருநாய்கள் தொல்லை இல்லாத சாலை வழியாக சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News