உள்ளூர் செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராட்டம்

Published On 2023-09-05 07:13 GMT   |   Update On 2023-09-05 07:13 GMT
  • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகி பேட்டி
  • உலக ஆசிரியர் தினமான அக்டோபர் 5-ந்தேதி டெல்லியில் ரத யாத்திரை நிறைவடைகிறது.

கன்னியாகுமரி :

அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ரத யாத்திரை நடைபெறுகிறது. இந்தியாவின் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி கன்னியாகுமரி உள்பட 4 இடங்களில் தொடங்கி உலக ஆசிரியர் தினமான அக்டோபர் 5-ந்தேதி டெல்லியில் ரத யாத்திரை நிறைவடைகிறது.

இந்த 4 குழுக்களையும் ஒருங்கிணைத்து டெல்லியில் அக்டோபர் 5-ந் தேதி மாபெரும் மாநாடு நடக்கிறது. அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட நேரிடும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை கொண்டுள்ள மத்திய அரசு, 7-து ஊதியகுழு பரிந்துரையின்படி ஒரே ஊதிய முறையை அமுல் படுத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை வந்தால் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News