நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நிரந்தரமாக ரெயில்வே போலீசார் நியமிக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை
- ரெயிலில் பயண கட்டணம் மிக குறைவு, மேலும் உடல் வலி இருக்காது என்பதால் ரெயில் பயணத்தையே பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி பயணம் செய்து வருகின்றனர்.
- ஆனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் வந்து செல்ல ஏதுவாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்கப்படவில்லை
நாகர்கோவில் :
தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்து ள்ளது கன்னியாகுமரி மாவட்டம். மாவட்டத்தின் தலைமையிடம் நாகர் கோவில் ஆகும். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வியா பாரிகள் ஆகியோர் வெளியூர் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு தினந்தோறும் சென்று வருகின்றனர்.
ரெயிலில் பயண கட்டணம் மிக குறைவு, மேலும் உடல் வலி இருக்காது என்பதால் ரெயில் பயணத்தையே பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி பயணம் செய்து வருகின்றனர்.
நாகர்கோவில் பகுதியில் 2 ரெயில் நிலையங்கள் உள்ளன. கோட்டார் பகுதியில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையமும், பள்ளி விளை பகுதியில் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையமும் உள்ளன. பள்ளிவிளை பகுதியில் அமைந்துள்ள நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் மிகவும் முக்கியமான ரெயில் நிலையம் ஆகும். இந்த நிலையத்தில் ஒரு பிளாட் பாரம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மற்றொரு பிளாட் பாரத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ரெயில் நிலையம் வழியாக ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன. அதில் 18 ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன.
இந்த ரெயில் நிலையத்தை வடசேரி, வெட்டூர்ணிமடம், பள்ளிவிளை, ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள், நோயாளிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரெயில் நிலையத்தில் இருந்து வடசேரி மற்றும் பிற பகுதிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் வந்து செல்ல ஏதுவாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பயணிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். மேலும் ரெயில் நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் ஏதும் இல்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கென ரெயில்வே போலீசார் நியமிக்கப்படவில்லை. ஆதலால் பயணிகள் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இங்கு நிரந்தரமாக பணிபுரிய ரெயல்வே போலீசார் நியமிக்க வேண்டும்.
மேலும் அடிப்படை பொருட்கள் வாங்குவதற்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.