- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 5 நாட்களில் 11 அடி உயர்வு
- மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாக உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. இன்று காலையில் அங்கு மழை பெய்தது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, மாம்பழத்துறையாறு, நாகர்கோவில் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. சிற்றாறு-2 அதிகபட்சமாக 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதிகளிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 28.60 அடியாக உள்ளது. அணைக்கு 294 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.93 அடியாக உள்ளது. அணைக்கு 972 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.41 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 12 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாக உள்ளது.
விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக பாசன குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மழை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.