பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
- கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை
- குமரி மாவட்டம் முழுவதும் மழை நீடிப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது.இன்று காலையிலும் ஒரு சில இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறை அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.அங்கு அதிகபட்சமாக 57.8 மில்லிமிட்டர் மழை பதிவாகியுள்ளது.
கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதி களிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.அணைக்கு வரக்கூடிய தண்ணீ ருக்கு ஏற்ப அணையிலி ருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை ஆறு, பரளியாறு கோதை யாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகி றார்கள். திற்பரப்பு அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப் பட்டு உள்ளது.
பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று காலை 42.27 அடியாக உள்ளது. அணைக்கு 1437 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1066 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.70 அடியாக உள்ளது. அணைக்கு 842 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 1864 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 13.22 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.93 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.20 அடியாக உள்ளது.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் ழுழுவதும் 750 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகிறார்கள். தெரிசனங்கோப்பு, அரும நல்லூர், பூதப்பாண்டி சுசீந்திரம் பகுதிகளில் கும்பப்பூ சாகுபடி நடந்து வருகிறது.