உள்ளூர் செய்திகள்

குளச்சல் கொட்டில்பாட்டில் மீண்டும் கடல் அரிப்பு-சாலைகள் துண்டிப்பு

Published On 2023-07-10 07:25 GMT   |   Update On 2023-07-10 07:25 GMT
  • வீடுகள் இடியும் அபாயம்
  • கடந்த 4 நாட்களாக குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது

கன்னியாகுமரி :

குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் எழுந்து கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது. இதில் ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட கடலரிப்பில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் மேற்கு சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கடலில் விழுந்தது. அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. நேற்று மீண்டும் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் பள்ளத்தில் கொட்டப்பட்ட மணல் முழுவதும் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் கொட்டில்பாடு கடற்கரை செல்லும் கிழக்கு சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து எழும் ராட்சத அலைகளினால் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கொட்டில்பாட்டில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் இன்று காலை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

குளச்சலில் ஏற்பட்ட கடலரிப்பில் துறைமுக பழைய பாலம் பகுதியில் மணலரிப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தின் அஸ்திவாரம் பகுதியில் சுமார் 7 அடி ஆழத்திற்கு மணலரிப்பு ஏற்பட்டு தூண்கள் வெளியே தெரிகிறது. மணற்பகுதியிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மாலை வேளையில் பொழுது போக்கிற்கு கடற்கரை வரும் பொதுமக்கள் மணற்பரப்பில் அமர முடியாமல் உள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி மாலை கடற்கரை வந்த பொதுமக்கள் மணற்பரப்பில் உட்கார முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். இன்று கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியினை கல்குளம் தாசில்தார் கண்ணன் தலைமையில் குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி ஆகியோர் பார்வை யிட்டனர். இதைத்தொடர்ந்து குளச்சல் நகராட்சியினரும் சென்று பார்வை யிட்டனர்.

Tags:    

Similar News