இடலாக்குடி பகுதியில் கால்வாயை சீரமைத்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவு
- மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பறக்கின் கால் பகுதியில் கிடந்த கழிவுகளை அகற்றினர்.
நாகர்கோவில், நவ.14-
நாகர்கோவில் மாநகராட்சி 26-வது வார்டு இடலாக்குடி பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாயுடு ஆஸ்பத்திரி பின்புறம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாயில் புதர்கள் மண்டி, குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் தேங்கி தண்ணீர் சீராக செல்லவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த கால்வாயை மேயர் மகேஷ் பார்வை யிட்டார். கால்வாயில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்றி, தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார். பறக்கின்கால் பகுதியில் குப்பைகள் நிரம்பி சுகாதார சீர்கேடாக காணப்பட்டதோடு, மதுபாட்டில்களும் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தது. அவற்றை உடனே அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பறக்கின் கால் பகுதியில் கிடந்த கழிவுகளை அகற்றினர்.
நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட பள்ளவிளை, சானல்கரை பகுதியில் ரூ. 59 லட்சம் மதிப்பீட்டிலும், 6 -வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டிலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், உதவி பொறியாளர் ராஜ சீலி, சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, பகவதி பெருமாள், தொழில் நுட்ப உதவியாளர் பத்மநாபன், வடக்கு மண்டல தலைவர் ஜவஹர், கவுன்சிலர்கள் அமல செல்வன், சொர்ணதாய், பகுதி செயலாளர் ஷேக்மீரான், வட்ட செயலாளர்கள் பிரபாகரன், பீட்டர் ரெமிஜூஷ், எம்.கே.ராஜன், சாகுல், அன்சாரி மற்றும் பகுதி செயலாளர்கள் துரை, ஷேக்மீரான், தொண்டரணி ராஜன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.