ஆரல்வாய்மொழி அருகே பாரதிய ஜனதா பிரசார வாகனத்தின் மீது கல்வீச்சு
- மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் தப்பி ஓட்டம்
- சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசாரிடம் வழங்கி உள்ளார்கள்.
நாகர்கோவில் :
மத்திய பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனை களை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் பார திய ஜனதாவினர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் நாகர்கோவில் நாகராஜா திடலில் வருகிற 2-ந்தேதி குமரி சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். இது தொடர்பாகவும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரங்கள் நடந்து வருகிறது. தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட இளைஞரணி சார்பில் பூதப் பாண்டி, செண்பகராமன்புதூர் பகுதியில் வாகன பிரசாரம் நேற்று நடந்தது.
கல்லுமடமுக்கு பகுதியில் நேற்று இரவு இளைஞரணியினர் பிரசாரம் மேற்கொண்டு வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறினார்கள். திடீரென அந்த பகுதியில் கிடந்த கல்லை எடுத்து வாகனத்தின் மீது வீசினார்கள்.
இதையடுத்து பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கே திரண்டனர். இதற்கிடையில் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பத்மநாபன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரில் பாரதிய ஜனதா சார்பில் நடந்த வாகன பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி கல்வீசி தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசாரிடம் வழங்கி உள்ளார்கள்.
அந்த சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளில் அந்த வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் எண் தெளிவாக பதிவாகியுள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.