ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் ஆய்வு கூட்டம்: இளைஞர்கள் சுயவேலை தொடங்குவதற்கு தாட்கோ மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு
- நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் ஆய்வு கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று நடந்தது.
- நிகழ்ச்சியில் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆடையகம் அமைக்க தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.2 லட்சத்தை பயனாளிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்
நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் ஆய்வு கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் இன்று நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் ஆனந்த், பழங்குடியினர் இயக்குனர் அண்ணாதுரை, வன அதிகாரி இளையராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி கனகராஜ், தாசில்தார் கோலப்பன், மாவட்ட திட்ட அதிகாரி பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆடையகம் அமைக்க தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.2 லட்சத்தை பயனாளிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். மேலும் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கறவை மாடு வளர்க்க மானியத்துடன் கூடிய கடனுதவி 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.7 லட்சமும், தூய்மை பணியாளர் நல வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 11 ஆயிரத்து 59 வழங்கப்பட்டது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித்தொகையாக 2 பேருக்கு ரூ.6¼ லட்சமும், பழங்குடியினர் நல வாரியத்தில் ஈமச்சடங்கு உதவி தொகையாக ஒருவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் பொன்மனை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 16 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டையையும், இரணியல் பேரூராட்சியில் 9 தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டையும், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
கேலிச்சித்திரம் வரைதல் போட்டியில் மாநில அளவில் 3-ம் இடம் பெற்ற பத்துகாணி அரசு பழங்குடி யினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவி அகல்யா பிரசாத்திற்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. திருமங்கலத்தில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான டென்னிஸ் பந்து போட்டி யில் முதலிடம் பெற்ற பேச்சிப்பாறை பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு சுழல் கோப்பையை அமைச் சர் கயல்விழி செல்வராஜ் வழங்கி கவுரவித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், எந்த ஒரு சாமானிய மக்களும், எந்த ஒரு அடையாளத்தின் அடிப்படையிலும் அவர்கள் புறந்தள்ளி விடக்கூடாது. அனைவரையும் ஒன்றிணை. அதாவது சமூக ரீதியாக யாரையும் ஒதுக்கி வைத்து விடக்கூடாது என்ற அரசாக இருக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் வள்ளலாக வாரி வழங்கி வருகிறார். பின்தங்கிய மக்கள் வாழ்க்கையில் முன்னேற பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசிற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றார்.அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நலத்துறையின் திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். அடித்தட்டு மக்களின் கல்வி, பொருளாதாரத்தை முன்னேற்ற செய்வதே இந்த துறையின் நோக்கமாகும். இளைஞர்கள் சுய வேலை தொடங்குவதற்கு தாட்கோ மூலமாக கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. அரசு பொறுப் பேற்றவுடன் பழங்குடியினர் உரிமைகளை பாதுகாக்க மாநில ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மனித நேயமிக்க துறையாக இந்த துறை விளங்கி வருகிறது.மாவட்டந்தோறும் சென்று ஆய்வு செய்து என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று ஆய்வு செய்து அந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றார்.
முன்னதாக தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று காலை கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் கோவளம் ரோட்டில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் அரசு பள்ளி மாணவிகள் விடுதியில் "திடீர்" ஆய்வுகொண்டார். அங்குள்ள சமையலறை மற்றும் விடுதி அறைகளுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் அந்த விடுதி வளாகத்தில் மரக்கன்று களையும் அமைச்சர் கயல் விழி செல்வராஜ் நட்டார்.