நாகர்கோவிலில் நகை கடை 'திடீர்' மூடல்; பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
- பொதுமக்கள் ஏராளமானோர் மாதம் பணம் செலுத்தி வந்தனர். சிலர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினார்கள்.
- நகைக்கடை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மூடப்பட்டு இருப்பதாக அறிவிபபு
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் மாதம் மாதம் பணம் கட்டினால் ஆண்டு இறுதியில் செய்கூலி சேதாரம் இல்லாமல் நகைகள் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை நம்பி பொதுமக்கள் ஏராளமானோர் மாதம் பணம் செலுத்தி வந்தனர். சிலர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினார்கள்.
இந்த நிலையில் நகை கடை மூடப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து பணம் செலுத்திய ஏராளமான பொதுமக்கள் இன்று காலை கடையின் முன்பு திரண்டனர். அப்போது நகை கடை மூடப்பட்டு இருந்தது. பராமரிப்பு பணி காரணமாக கடை மூடப்பட்டு இருப்பதாக கடையின் முன்பு அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நகைக்கடை ஊழியர்களை தொடர்பு கொண்டு பேசினார்கள். சிலர் நீண்ட நேரம் தொடர்பு கொண்ட பிறகும் போனை எடுக்கவில்லை. ஒரு சில வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டபோது போனை எடுத்து நகைக்கடை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மூடப்பட்டு இருப்பதாகவும், அடுத்த வாரம் திறக்கப்பட்டதும் உங்களுக்குரிய நகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
நகைக்கடை மூடப்பட்ட தகவல் குமரி மாவட்டம் முழுவதும் பரவியது. இதனால் பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கடை முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி தகவல் தெரிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.