குளச்சல் ஆழ்கடலில் சூறைகாற்று வீசியதால் பாதியில் கரை திரும்பிய விசைப்படகுகள்
- பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.
- மீன்கள் கிடைக்காததாலும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே இன்று காலை கரை திரும்பின
கன்னியாகுமரி :
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.
பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.
இந்நிலையில் குளச்சல் ஆழ்கடல் பகுதியில் லேசான காற்று வீசுவதாலும், மீன்கள் கிடைக்காததாலும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே இன்று காலை கரை திரும்பின. அவை குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் குளச்சலில் இன்று மீன்வரத்து வெகுவாக குறைந்தது.
இது குறித்து விசைப்படகு மீனவர் ஒருவர் கூறியதாவது:-
தற்போது விசைப்படகுகளில் மீன்பிடி சீசன் நன்றாக இருக்க வேண்டிய சீசனாகும்.ஆனால் ஆழ்கடல் பகுதியில் தற்போது மீன்கள் கிடைக்கவில்லை. இதனுடன் கடலில் லேசான காற்றும் வீசுகிறது.இதனால் விசைப்படகினர் கரை திரும்பி உள்ளனர் என்றார்.
விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.