உள்ளூர் செய்திகள்

விஜய்

ரெயிலில் தவறி விழுந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது

Published On 2022-11-08 08:15 GMT   |   Update On 2022-11-08 08:15 GMT
  • பஞ்சாப் ரெஜிமென்டில் பணி செய்து வந்தார்.
  • இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி:

திருநந்திக்கரை வியாலிவிளையைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள்.இவரது மகன் விஜய் (வயது 24).

கடந்த 2020-ம் வருடம் இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர் பயிற்சி முடித்து பஞ்சாப் ரெஜிமென்டில் பணி செய்து வந்தார். கடந்த 4 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவர் சொந்த ஊருக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை மராட்டிய மாநிலம் சந்திரப்பூர் மாவட்டம் பத்ராவதி என்ற இடத்தில் ரெயில் தண்டவாளம் பகுதியில் ரத்தவெள்ளத்தில் இவர் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், அவரது சடலம் பத்ராவதி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவரது குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.

இந்த தகவலை கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து விஜயின் மூத்த சகோதரரும், ராணுவ வீரருமான விஷ்ணு நேற்று முன்தினம் இரவு சம்பவ நடந்த பத்ராவதிக்கு கிளம்பிச் சென்றார். இந்நிலையில் விஜயின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று காலையில் திருவனந்தபுரம் வழியாக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Tags:    

Similar News