அழகியமண்டபத்தில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய லாரி
- போலீசிடம் இருந்து தப்பிக்க கனிமவளங்கள் அதிகாலையில் கொண்டு செல்லப்படுகிறது.
- டிரைவர்கள் வேகமாக லாரியை ஓட்டுவதால் பல இடங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிமவளங்கள் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களில் அதிகபாரம் ஏற்றி செல்வதால் போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது.
மேலும் பல லாரிகள் அனுமதி இல்லாமல் கனிமவளங்கள் கொண்டு செல்வதாக சப்-கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போலீசிடம் இருந்து தப்பிக்க கனிமவளங்கள் அதிகாலையில் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கனிமவளங்கள் கொண்டு சென்ற லாரி ஒன்று வேகமாக வந்து டிரைவரின் கட்டுபாட்டை மீறி அழகியமண்டபம் சென்டர் மீடியனில் மோதி அருகில் உள்ள கடை பக்கம் வந்து நின்றது. அப்போது ஒரு சிலர் மட்டுமே பஸ்சுக்காக காத்திருந்ததால் அலறி அடித்து ஓடினர். மேலும் அருகில் சுமார் 25-க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் வரிசையில் நின்றன. அதிஷ்டவசமாக இவர்கள் மீது மோதாமல் உயிர் தப்பியுள்ளனர்.
விடிவதற்கு முன்பே செல்ல வேண்டும் என டிரைவர்கள் வேகமாக லாரியை ஓட்டுவதால் பல இடங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. போலீசார் இதனை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.