மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய மேயர்
- மக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க உத்தரவு
- சாக்கடை ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டு வட்டவிளை, காந்திஜி நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம், 42-வது வார்டுக்குட்பட்ட வேதநகர் கோவில் தெரு 1,2,3 பகுதிகளில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 52-வது வார்டு புல்லுவிளை-குளத்து விளை சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் போன்றவை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, உதவி பொறியாளர் ராஜசீலி, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் அனிலா, ஸ்டாலின் பிரகாஷ், ரமேஷ், சுகதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள் ராஜேஷ், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். வீட்டு வரி குறைப்பு, சொத்து வரி பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காண அவர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகர பகுதியில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே சாக்கடை ஓடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சுகாதார ஆய்வாளர்கள் அனைவரும் தூய்மை பணியாளர்கள் மூலமாக மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவுநீர் ஓடைகளையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் சாக்கடை நீர் சாலைகளில் ஓடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.