உள்ளூர் செய்திகள்

அபிதா

குளிர்பானம் குடித்ததில் தொடரும் இறப்பு விவகாரத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2022-11-07 09:48 GMT   |   Update On 2022-11-07 09:48 GMT
  • மகளுக்கு காதலனே விஷம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு
  • நித்திரவிளை மாணவி சாவில் தாயார் பரபரப்பு புகார்

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள வாவறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பர். இவரது 3-வது மகள் அபிதா (வயது 19). களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த 1-ந் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பதில் மர்மம் நிலவியது.

இதற்கிடையில் அபிதா காதல் விவகாரம் காரணமாக விஷம் அருந்தி இருக்கலாமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் அபிதாவுக்கு பழக்கம் இருந்ததும், அந்த வாலிபருடன் பல இடங்களுக்கு அவர் சென்று வந்திருப்பதும் தெரிய வந்தது. தற்போது பெங்களூருவில் படித்து வரும் அந்த வாலிபர், அபிதாவுடன் பேசுவதை கடந்த சில மாதங்களாக தவிர்த்துள்ளார்.

இதுபற்றி அபிதா போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னுடன் பழகி விட்டு திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது அவர் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

அதன் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேசி உள்ளனர். அப்போது அபிதாவை திருமணம் செய்வதாக வாலிபர் உறுதி அளித்துள்ளார். அதன்படி வருகிற 13-ந் தேதி அவர்களுக்கு திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிதா மர்மமாக இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அபிதாவின் தாயார் தங்கபாய், போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது மகள் சாவுக்கு அவளது காதலன் தான் காரணம் என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மகளை அவர் அழைத்துச் சென்றார். அவரை சந்தித்து விட்டு திரும்பியதில் இருந்து தான் அபிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

எனவே அவர் தான், அபிதாவுக்கு விஷம் கலந்த எதையோ கொடுத்துள்ளார் என்றும் புகாரில் அவர் கூறி உள்ளார். இதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அபிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அல்லது உடல் நலக் குறைவால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தக்கலை பள்ளி மாணவன் அஸ்வின் பள்ளி வளாகத்தில் சீருடை அணிந்து வந்தவர் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தான்.

இதில் இன்னும் குளிர்பானம் கொடுத்தது யார்? என்பது தெரிய வில்லை. இதேபாணியில் குமரி மாவட்டம் கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன்ராஜ், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. இது தொடர்பாக அவரது காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் நித்திரவிளை மாணவி அபிதாவும், காதலனால் விஷம் கொடுத்ததில் இறந்துள்ளார் என அவரது தாயார் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News