- பெருஞ்சாணியில் 59 மில்லி மீட்டர் பதிவு
- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்ன லுடன் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் காலையில் வழக்கமாக வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு மழை பெய்தது. புத்தன் அணை, குழித்துறை, தக்கலை பகுதியில் மாலையில் வானத்தி சாரல் மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. அதன்பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலபகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. பெருஞ்சாணியில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 59 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவி யில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்னம் நிலவியது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிக ரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.25 அடியாக உள்ளது. அணைக்கு 320 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ் சாணி அணையின் நீர்மட்டம் 37.45 அடியாக உள்ளது. அணைக்கு 242 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நாகர் கோவில் நகர குடிநீருக்காக 51 கன அடி தண்ணீர் திறக் கப்பட்டு உள்ளது.
சிற்றார்-1 நீர்மட்டம் 8.20 அடியாகவும், சிற்றார்-2 நீர்மட்டம் 8.30 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 13.70 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணை நீர்மட்டம் 2.30 அடியாகவும் உள்ளது. முக்கடல் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாகவே இருக்கிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் மைனஸ் 19.10 அடியாக உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்து மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 28.6, பெருஞ்சாணி 59, சிற்றார்-1-30, சிற்றார்-2-6.4, பூதப்பாண்டி 30.4, களியல் 12, கன்னிமார் 18.2, குழித்துறை 20, நாகர்கோவில் 4, புத்தன் அணை 57.8, சுருளோடு 55.4, தக்கலை 30.3, இரணியல் 22, பாலமோர் 24.2, மாம்பழத் துறை ஆறு 25, திற்பரப்பு 7.4, ஆரல்வாய்மொழி 3, கோழிபோர்விளை 4.7, குருந்தன்கோடு 36, ஆணைக் கிடங்கு 23, முக்கடல் 21.2.
நேற்று மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலை யில் இன்று காலையில் மீண்டும் வெயில் அடித்தது.