நாகராஜா கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
- நாளை ஆவணி முதல் ஞாயிறு
- நாகராஜருக்கு தீபாராதனையும், அபிஷேகங்களும் நடக்கிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் நாகராஜா கோவில் நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
இதனால் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாகராஜரை வழிபட்டு செல்கிறார்கள். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான நாளை (20-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனையும், அபிஷேகங்களும் நடக்கிறது. கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
சுட்டெரிக்கும் வெயில் அடித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு வசதியாக கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்ற செல்லும் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வரிசையாக நின்று சாமி கும்பிட வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவில் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.