உள்ளூர் செய்திகள்

திருடிய மோட்டார் சைக்கிள்களை ரோட்டோரத்தில் விட்டு செல்லும் கொள்ளையர்கள்

Published On 2023-09-09 06:54 GMT   |   Update On 2023-09-09 06:54 GMT
தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

நாகர்கோவில் :

நாகர்கோவில் நகரில் சமீப நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வடசேரி, கோட்டார், நேசமணிநகர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் கடைவீதிகளில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கொள்ளையர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க திருடப்படும் மோட்டார் சைக்கிள் ரோட்டோரங்களில் மீட்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. போக்குவரத்து பிரிவு போலீசார் நாகர்கோவில் நகரில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒழுகினசேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரோட்டோரத்தில் அனாதையாக நின்றது. இதை மீட்ட போலீசார் அந்த வண்டிக்கு அபராதத்தை விதித்தனார். இதுதொடர்பாக விசாரித்தபோது மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 2-ந்தேதி வடசேரி பகுதியில் நிறுத்தியிருந்தபோது திருடி சென்று விட்டதாகவும் இது தொடர்பாக வடசேரி போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து போலீசார் அந்த உரிமையாளரை வரவழைத்து அந்த வாகனத்தை ஒப்படைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பும் வேப்பமூடு, கோட்டார் பகுதிகளில் இதேபோல் போக்குவரத்து போலீசார் திருடிய மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் விட்டு சென்றதை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள் திருடிய மோட்டார் சைக்கிளை சாலை ஓரங்களில் நிறுத்தி செல்வதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்று நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு மோட்டார் சைக்கிள்களை சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு அவர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News