உள்ளூர் செய்திகள்

இன்று உலக மீனவர் தினம்

Published On 2023-11-21 07:05 GMT   |   Update On 2023-11-21 07:05 GMT
  • குமரி கடற்கரை கிராமங்களில் உற்சாக கொண்டாட்டம்
  • கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது

நாகர்கோவில் :

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் மீனவர்கள் இன்று மீனவர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவ கிராமங்களில் இன்று மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து காலையில் அந்தந்த பகுதியில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. உலக மீனவர் தினத்தையொட்டி மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகு வள்ளங்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.

குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் துறைமுகங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. விசைப்படகுகளுக்கு பங்கு தந்தைகள் அர்ச்சிப்பு செய்ததுடன் கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். குளச்சல் காணிக்கை அன்னை ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இன்று நீச்சல் போட்டி மற்றும் படகு போட்டிகள் நடந்தது. கொட்டில்பாடு கிராமத்தில் கடல் மீன் சமையல் போட்டியும் நடத்தப்பட்டது. மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணியப்பன் தலைமையில் இன்று காலை திருப்பலி நடந்தது.

பங்கு தந்தை யூஜின் தாமஸ் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பங்கு மக்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு சென்றனர். கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளம் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. கடலில் மீனவர்கள் மலர் தூவியும் வழிபட்டனர்.

பள்ளம் புனித மத்தேயூ ஆலயத்தில் பங்குத்தந்தை சகாய ஆண்டனி தலைமையில் திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து கடற்கரையில் மீன்பிடி உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. அன்னை நகர் அற்புதநாயகி ஆலயத்தில் பங்கு ரேமண்ட் தலைமையில் திருப்பலி நடந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

உலக மீனவர் தினத்தையொட்டி இணையம் புத்தன்துறையில் உலக மீனவர் தின பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை, கனிமொழி எம்.பி., விஜய்வசந்த் எம்.பி., அமைச்சர்கள் மனோதங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவர் கிராமங்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News