கன்னியாகுமரியில் மழை மேகமூட்டத்தால் சூரிய உதயம் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- மழை மேக மூட்டம் காரணமாக வானம் மப்பும் மந்தாரமாகவும் காட்சி அளித்தது
- ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற வாரவிடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. வழக் கம்போல இந்த வாரத்தின் கடைசி விடுமுறை நாளான சனிக்கிழமையான இன்று அதிகாலையில் இருந்தே கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே குவிய தொடங்கினார்கள். ஆனால் மழை மேக மூட்டம் காரணமாக வானம் மப்பும் மந்தாரமாகவும் காட்சி அளித்தது. இடையிடையே சாரல் மழை விழுந்து கொண்டிருந்தது. மழை மேகம் கலையாமல் தொடர்ந்து நீடித்ததால் கன்னியாகுமரி கடற் கரைக்கு சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் சூரியன் உதயமாகும் காட்சியை தங்களது செல்போன்களில் படம் பிடிக்கலாம் என்று கடற்கரையில் செல்போன்களை தூக்கிப்பிடித்தபடி காத்தி ருந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். அதேபோல கன்னியா குமரியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.