ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் இன்று காலை குவிந்த சுற்றுலா பயணிகள்
- விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல கூட்டம் அலைமோதியது
- போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமானோர் குவிந்திருந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்யும் போதும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கடற்கரையில் இருந்த படியும் செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.